< Back
மாநில செய்திகள்
வேனில் 41 மாணவர்களை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம் நாகர்கோவிலில் போலீசார் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வேனில் 41 மாணவர்களை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம் நாகர்கோவிலில் போலீசார் அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
27 Jun 2023 7:15 PM GMT

நாகர்கோவிலில் விதிகளை மீறி வேனில் 41 பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த டிரைவருக்கு போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீசார் அபராதம் விதித்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விதிகளை மீறி வேனில் 41 பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த டிரைவருக்கு போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீசார் அபராதம் விதித்தனர்.

தீவிர கண்காணிப்பு

ஆட்டோக்களில் பள்ளி மாணவ-மாணவிகளை அதிகளவு ஏற்றி செல்லக்கூடாது என்றும், அவ்வாறு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மாநகராட்சியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று புத்தேரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் மற்றும் வேன்களை போலீசார் கண்காணித்தனர். அப்போது ஒரு வேனில் அதிக அளவு மாணவர்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அபராதம்

பின்னர் ஆய்வு செய்ததில் 13 மாணவர்களை மட்டுமே ஏற்றி வரவேண்டிய அந்த வேனில் பள்ளி மாணவர்கள் 41 பேர் இருந்தனர். இதே போல 8 மாணவர்களை ஏற்றி வரவேண்டிய ஒரு டெம்போவில் 23 மாணவர்களை ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 வாகன டிரைவர்களுக்கும் தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்ட கார் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக ஒழுகினசேரி பகுதியில் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததால் கார் ஓட்டுனர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து அபாயம்

இதுபற்றி போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணிடம் கேட்டபோது, "ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் மாணவ-மாணவிகளை அதிகளவு ஏற்றி வருவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் பல ஆட்டோக்களிலும், வேன்களிலும் அதிகளவு மாணவர்களை ஏற்றி வருகிறார்கள். எனவே அவ்வாறு ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஆட்டோவில் 2-வது முறையாக அதிக மாணவர்களை ஏற்றி வந்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் அதே நிலை தொடர்ந்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்