< Back
மாநில செய்திகள்
திராட்சைப்பழம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - சாலையில் ஆறாக ஓடிய திராட்சை ரசம்...!
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

திராட்சைப்பழம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - சாலையில் ஆறாக ஓடிய திராட்சை ரசம்...!

தினத்தந்தி
|
26 May 2022 6:06 AM GMT

வாணியம்பாடி அருகே திராட்சைப்பழம் ஏற்றி வந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்பில் இருந்து நேற்று மாலை ஒரு வேனில் 2 டன் எடையுள்ள திராட்சைப் பழங்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அடுத்த மாதனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. வேனை மாதனூரை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 30) ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் கிளீனராக இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 2 டன் திராட்சை பயன்கள் ரோட்டில் சிதறியது. அந்த வழியாக வந்த வாகனங்கள் திராட்சை பழங்கள் மீது ஏறி இறங்கியதில் சாலை முழுவதும் திராட்சை ரசம் ஆறாக ஓடியது.

இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் சரவணன் மற்றும் கிளீனர் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் சாலையில் கொட்டி கிடந்த திராட்சை பழங்களை அப்புறப்படுத்தி விபத்துக்குள்ளான வேனை மீட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்