மதுரை
மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர்,லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
|கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர், லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பேரையூர்,
கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர், லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
கோவில் விழாவுக்காக வந்தவர்கள்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தெய்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் மாயாண்டி (வயது 59), தங்கப்பாண்டி (53), கண்ணன் (33).
இதில் மாயாண்டி கல்பாக்கத்திலும், தங்கப்பாண்டி சேலத்திலும் கடை நடத்தி வந்தவர்கள் ஆவர். என்ஜினீயரான கண்ணன் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் தெய்வநாயகபுரத்தில் நடைபெற உள்ள கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஊருக்கு வந்திருந்தனர். விழாவுக்கு பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து பேரையூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
லாரி சக்கரத்தில் சிக்கி பலி
மோட்டார் சைக்கிளை கண்ணன் ஓட்டியதாக கூறப்படுகிறது. பேரையூர்-சிலைமலைபட்டி சாலையில் சென்றபோது, எதிரே போடியிலிருந்து ராஜபாளையம் நோக்கி ஒரு லாரி வந்தது. அந்த லாரி திடீரென முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேரும் சாலையில் விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நடுரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் உயிரிழந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த லாரியை அதன் டிரைவர் அங்கு நிறுத்திவிட்டு ஓடினார்.
கிராமமே சோகம்
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து, இந்த கோர விபத்து பற்றி பேரையூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், 3 பேர் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரான தேனி மாவட்டம் போடி தாலுகா பண்ணைதோப்பை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 42), பேரையூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்த இடத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தால், தெய்வநாயகபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.