< Back
மாநில செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம்: வருவாய்துறையினர் மீட்டனர்
கரூர்
மாநில செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம்: வருவாய்துறையினர் மீட்டனர்

தினத்தந்தி
|
3 Dec 2022 12:40 AM IST

அரவக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமல் சுற்றிதிரிந்து வந்தார்.

மேலும் அவர் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி உண்பதாகவும் இருந்து வந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் பலமுறை பேச்சுக்கொடுத்தும் எதையும் அந்த முதியவர் கண்டு கொள்ளவில்லை.

பணம் வசூல்

இதற்கிடையில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரை ஒரு மர்ம கும்பல் சித்தர் என்று கூறி பிடித்து வந்து, திண்டுக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். பின்னர் அந்த கும்பல் மனநலம் பாதிக்கப்பட்டவர் முன்பு ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அடிக்கடி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி சென்று அப்பகுதியில் உள்ள அரளி செடிக்குள் படுத்து விடுவாராம். இதையடுத்து அந்த மர்ம கும்பல் மீண்டும் பிடித்து வந்து, அவரை கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்க வைத்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்்.

வருவாய்த்துறையினர் மீட்டனர்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தவின்படி நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா, அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் என கூறி பணம் வசூல் செய்த மர்மநபர்கள் யார்? என்று அரவக்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்