< Back
மாநில செய்திகள்
சிக்னல் குளறுபடியால் நடுவழியில் நின்ற ரெயில்
தேனி
மாநில செய்திகள்

சிக்னல் குளறுபடியால் நடுவழியில் நின்ற ரெயில்

தினத்தந்தி
|
20 Jun 2023 12:45 AM IST

தேனியில் ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட சிக்னல் குளறுபடியால் ரெயில் நடுவழியில் நின்றது. கேட்டை திறக்க முடியாததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ரெயில்வே கேட்

தேனி மாவட்டம் போடிக்கு மதுரையில் இருந்து தினமும் காலையில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அத்துடன் வாரம் 3 முறை சென்னை-போடி இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை-போடி ரெயில் தேனிக்கு காலை 8.40 மணிக்கும், மதுரை-போடி ரெயில் தேனிக்கு காலை 9.44 மணிக்கும் வரும். அங்கிருந்து போடிக்கு புறப்பட்டுச் செல்லும்.

நேற்று காலையில் 9.40 மணிக்கு மதுரை-போடி ரெயில் வரும் என்பதற்காக தேனியில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, பாரஸ்ட்ரோடு ஆகிய இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் மூடப்பட்டன. அந்த சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கின.

திடீரென நின்ற ரெயில்

மதுரை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில் வந்தபோது திடீரென ரெயில் நின்றது. ரெயில்வே கேட் பகுதியில் இருந்து சிக்னல் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் ரெயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ரெயில் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

ரெயில் சென்ற பிறகு ரெயில்வே கேட்டை திறக்க முயன்றபோது, கேட்டை திறக்க முடியாமல் அங்கிருந்த ஊழியர் திணறினார். சுமார் 10 நிமிடமாக ரெயில்வே கேட்டை திறக்க முடியாததால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது

இதற்கிடையே பாரஸ்ட்ரோடு ரெயில்வே கேட் திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிலர் மதுரை சாலையில் இருந்து திரும்பி பாரஸ்ட்ரோடு வழியாக சென்றனர். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் பாரஸ்ட்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு மதுரை சாலையில் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.

அதன்பிறகு வாகனங்கள் கடுமையான நெரிசலுக்கு இடையே கடந்து சென்றது. இதனால், மதுரை சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. வரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்