திருவாரூர்
திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
|திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பழங்கள்-பூக்களை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
ஆடிப்பெருக்கு விழா
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீரை மட்டுமே நம்பி பெரும்பாலான பரப்பளவில் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உழவுக்கு உறுதுணையாக இருந்து வாழ்வாதாரத்தை காத்து வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதில் தண்ணீர் வரத்தினை கருத்தில் கொண்டு ஆறுகளில் முறைவைத்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையாக சாகுபடியை மேற்கொள்ள தண்ணீரை முறைவைக்காமல் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழங்கள் விற்பனை மும்முரம்
இன்று(வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் ஆடிப்பெருக்கில் முக்கிய இடத்தை பிடிக்கும் பேரிக்காய், விளாம்பழம், மாம்பழம், கொய்யாபழம், வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பலவித பழங்கள் சராசரியாக கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த பொருட்களுடன் காதோலை கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
பண்டிகை காலங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் பூக்கள் விலை வழக்கம் போல் விலை உயர்ந்துள்ளது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் மல்லி, முல்லை, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.500 என விலை உயர்ந்தது. அதேபோல் செவ்வந்தி, ரோஜா கிலோவிற்கு ரூ.50 என விலை உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பூ வர்த்தகர் ெரயில் பாஸ்கர் கூறுகையில், பண்டிகை காலங்களில் பூக்கள் விலை என்பது சற்று உயர்வது வழக்கம் தான். தற்போது ஆடிப்பெருக்கு விழா நாளை (இன்று) கொண்டாடப்படும் நிலையில் மல்லி, முல்லை விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மற்றவை கிலோ ரூ.50-க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த விலை என்பது விழாகால வழக்கமானது என்பதால் பண்டிகையை கொண்டாடிட மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர் என்றார்.