அ.தி.மு.க.வோடு ஓ.பன்னீர்செல்வம் இணைவதற்கான காலம் கடந்துவிட்டது- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்
|ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசுகிறார்.
அதில், அவர் பேசும்போது, அ.தி. மு.க.வில் மட்டுமே எளிய தொண்டனும், உயர்ந்த பதவியை அடைய முடியும். அந்தவகையில் அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது ஒரு சீர்த்திருத்த நடவடிக்கை என்றும், அதை பிளவு என்று சொல்வதே தவறு என்றும் சுட்டிக்காட்டிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலேயே பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க. என்பதால், இதில் எடப்பாடி பழனிசாமியும் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் பற்றி பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நல்லாட்சியை கொடுத்தும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனதால், உரிய முடிவு எடுக்க ஒற்றைத்தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைமை பதவிக்குரிய பண்புகள் இல்லை என்றும், இந்த எதார்த்தத்தை உணர்ந்து கொள்ள அவர் மறுப்பதால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ஆளுமையை நிரூபித்து உள்ளதாகவும், தொண்டர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்றுவிட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கான காலம் கடந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது என்ன? கோப்புகள் மாயமானது எப்படி? பன்னீர்செல்வம் மகனை நீக்கியது ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க.வின் செயல்பாடு உள்பட கட்சி விவகாரங்கள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாகவும், பொறுமையாகவும் ஆர்.பி.உதயகுமார் பதில் தெரிவித்துள்ளார்.