திருவள்ளூர்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் - வெளியே தாழ்ப்பாள் போட்டு சிறைப்பிடித்த பொதுமக்கள்
|பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் திருட முயன்ற நிலையில், அவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருவள்ளூர் தேரடி கனகவல்லிபுரம் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 79). இவரது மூத்த மகன் தாமோதரன். இளைய மகன் அனு. வீட்டின் மேல் தளங்களில் மகன்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இதில் கீழ்தளத்தில் முதியவர் கிருபாகரன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் கிருபாகரன் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது வீட்டின் கீழ் தளத்திலிருந்து சத்தம் வருவதை கேட்டு மேல்தளத்தில் இருந்தவர்கள் கீழே வந்து பார்த்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடப்பாரையால் பீரோவை உடைத்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் கிருபாகரன் வீட்டை சுத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டு சிறைபிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் ஒரு அறையில் பதுங்கியிருந்த கொள்ளையனை பிடித்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சென்னை கிண்டி ஆலாச்சி நகரை சேர்ந்த அரவிந்தன் (35) என்பதும், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அரவிந்தனை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.