சென்னை
காஞ்சீபுரத்துக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.35 லட்சம் இரும்பு தகடு திருட்டு; பா.ஜ.க. பிரமுகர் கைது
|காஞ்சீபுரத்துக்கு லாரியில் கொண்டுசென்ற ரூ.35 லட்சம் இரும்பு தகடை திருடிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் ரவிக்குமார் (வயது 37). இவர், கர்நாடகாவில் இருந்து காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் 29 டன் இரும்பு தகடுகளை டிரைவர் செல்வம் மூலம் லாரியில் அனுப்பி வைத்தார். ஆனால் அந்த இரும்பு தகடுகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்றடையவில்லை. டிரைவர் செல்வத்தின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இரும்பு தகடுகளை ஏற்றிச்சென்ற லாரி, ஆண்டார்குப்பம் அருகே சாலையோரம் அனாதையாக நின்றது. இது குறித்து ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் லாரி டிரைவர் செல்வம் தனது நண்பர்களான செங்குன்றத்தைச் சேர்ந்த பிச்சாண்டி (37), சந்தோஷ் (34), சுரேஷ்குமார் (36) மற்றும் திருவேற்காட்டை சேர்ந்த பாரதிராஜா (43) ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள இரும்பு தகடுகளை திருடியது தெரிந்தது. பாரதிராஜா உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார், திருமுல்லைவாயல் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த இரும்பு தகடுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான டிரைவர் செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான பாரதிராஜா திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.