செங்கல்பட்டு
நாவலூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 12 பவுன் நகை திருட்டு
|நாவலூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 12 பவுன் நகை திருடப்பட்டது.
12 பவுன் நகை மாயம்
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சத்யா (வயது 34). இவர் நேற்று முன்தினம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை மீட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிள் டிக்கியில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அப்படியே வரும் வழியில் நாவலூரில் தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து கொண்டு செல்வதற்காக பள்ளி அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றவர் மோட்டார் சைக்கிள் டிக்கியில் வைத்திருந்த நகையை பார்த்தபோது மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து அவர் உடனடியாக நாவலூரில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு சென்று அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளின் டிக்கியை திறந்து 12 பவுன் நகையை திருடி செல்வது கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இது குறித்து சத்யா தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் டிக்கியை உடைத்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.