செங்கல்பட்டு
சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் வசதிக்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு
|சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் வசதிக்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று குடியிருப்போர் சங்கங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தாம்பரம் வழியாக செல்கிறது. அதேபோல இரவு மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் திரும்பி வரும்போதும் தாம்பரத்தை கடந்து செல்கிறது.
இந்த ரெயிலில் போதுமான இருக்கைகள் இருந்தும் சென்னையில் இருந்து செல்லும்போதும், மதுரையில் இருந்து திரும்பி வரும்போதும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படாமல் செல்கிறது. இதனால் சென்னை புறநகரில் உள்ள பயணிகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயிலை பயன்படுத்த முடியவில்லை. சென்னை எழும்பூர் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது.
எனவே சென்னையில் இருந்து மதுரை செல்லும்போதும், மீண்டும் மதுரையில் இருந்து சென்னை வரும்போதும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதி குடியிருப்போர் சங்கங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தயானந்த கிருஷ்ணன், நாகராஜன், விஸ்வநாதன், ஜெய் உள்ளிட்டோர் மத்திய இணை மந்திரி எல்.முருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது குறித்து ரெயில்வே மந்திரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.