குரூப்-4 தேர்வு எழுத தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு
|வேலூரில் குரூப்-4 தேர்வுக்கு தாமதமாக வந்த வாலிபர் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணாடத்தில் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-4 தேர்வு கூடத்துக்கு காலை 9.20 மணி அளவில் வாலிபர் தேர்வு எழுதுவதற்காக வந்தார். பள்ளியின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த வாலிபரை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை. அவர் உள்ளே செல்ல அனுமதிக்கும்படி போலீசாரிடம் கெஞ்சி கேட்டார். ஆனால் போலீசார் தேர்வு கூடத்துக்குள் செல்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்று கூறி வாலிபரை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதனால் ஏமாற்றத்துக்கு உள்ளான வாலிபர் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்த சைக்கிள் உதவியுடன் சுற்றுச்சுவர் மீது ஏறி திடீரென பள்ளியின் உள்புறமாக குதித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
ஹால் டிக்கெட்டுகள் கிழிப்பு
இதே பள்ளியில் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்காததால் மற்றொரு நபர் தனது ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்து விட்டு ஆவேசமாக அங்கிருந்து சென்றார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி தேர்வு மையத்திலும் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த தேர்வர்கள் சிலர், தங்கள் ஹால்டிக்கெட்டுகளை கிழித்து எறிந்துவிட்டு சென்றனர்.
சாலை மறியல்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கர்ப்பிணி உள்பட 11 பேர் தேர்வு எழுத தாமதமாக வந்தனர்.
அவர்களை உள்ளே அனுமதிக்காததால் கண்ணீர் விட்டு அழுதபடி தேர்வர்கள், திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி தேர்வு மையத்தில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
இதேபோல் திருவாரூரில் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்காததால் தேர்வர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.