திண்டுக்கல்
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
|16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம்
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் சிறுமி தந்தையின் மோட்டார்சைக்கிளையும் அவர் திருடிசென்று உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட குழந்தைசாமிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும் சிறுமியை கடத்தி சென்றதற்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், மோட்டார் சைக்கிளை திருடியதற்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.500 அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.