தஞ்சாவூர்
வாலிபர் வெட்டிக்கொலை
|அம்மாப்பேட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே விண்ணுக்குடி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்கிற இளங்கோ (வயது31). இவர் அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இவர் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவில் முருகன்கோவில் அருகே இளங்கோ வந்து கொண்டிருந்தார். அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்பட்டது. இருள் நிறைந்த பகுதிக்கு இளங்கோ வந்தபோது ஒரு கும்பல் திடீரென அவரை வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் இளங்கோவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் இளங்கோ சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த தகவலை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட இளங்கோ உடலை பார்வையிட்டு, கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து இளங்கோ உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இளங்கோ கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.