செங்கல்பட்டு
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
|வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே உள்ள டாக்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 26), இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேவேந்திரன் இரவு வேலை முடிந்து கம்பெனி பஸ்சில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தேவேந்திரனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.