பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீடு என்று தெரியாமல் திருடிய வாலிபர்
|திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் கைதானார்.
ஆவடி,
திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் கைதானார். அவரிடம் இருந்து 24 பவுன் நகை மீட்கப்பட்டது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கிருபை ஜான் (வயது 58). இவரது மனைவி தீபம் (55). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி மர்மநபர்கள் இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 40 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பினனர் சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் சுதேசி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, ஆசிரியை தீபத்திடம் அதே பள்ளியில் சத்யா 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீடு என்று தெரியாமல் திருடியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். கைதான சத்யாவிடம் இருந்து 24.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி, 2 செல்போன்கள், ரூ.60 ஆயிரத்து 610 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சத்யா ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று கடந்த மாதம் 23-ந்தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.