சென்னை
தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்த வாலிபர்
|தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 65). இவர், தனது தங்கை தெய்வ சேனா (60) உடன் வசித்து வருகிறார். அதிகாலையில் பிரமிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், மூதாட்டி பிரமிளா காதில் அணிந்திருந்த கவரிங் கம்மலை தங்கம் என நினைத்து பறித்தார். இதில் மூதாட்டியின் 2 காதும் கிழிந்து ரத்தம் கொட்டியது. மூதாட்டி கூச்சலிட்டதால் அங்கிருந்த பூத்தொட்டியை எடுத்து பிரமிளாவின் தலையில் அடித்துவிட்டு மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.
மூதாட்டியை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது காதில் 15 தையல் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெடுங்குன்றம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீம் என்ற கிஸ்மாட் (19) என்பவரை கைது செய்தனர்.
இவர், கட்டிட வேலை பார்த்து கொண்டே இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.