யாரையும் நம்பி த.மா.கா. வாக்கு வங்கி கிடையாது - ஜி.கே.வாசன்
|காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விண்ணிலிருந்து பார்த்து கொண்டு இருக்கும் காமராஜர் ஆத்மா மன்னிக்காது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி யாரை நம்பியும் இல்லை என அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது:-
யாரையும் நம்பி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கிடையாது. யாரையும் வாக்குக்காக இழுக்க வேண்டும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கிடையாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் எந்தெந்த பகுதியில் வலிமையாக இருக்கிறதோ அந்தந்த பகுதியில் மக்கள் சந்திப்பை அதிகரித்து அதிக வாக்குகள் பெறுவது தான் எங்களின் பணியாக இருக்கும்.
எங்கள் கட்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற கட்சி. தொடர்ந்து ஐந்து ஆண்டு காலங்களாக மத்தியிலே சிறுபான்மையின மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிற கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு அந்த பணிகள் தொடரும். அந்த நம்பிக்கையும் எங்கள் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு. தமிழக காங்கிரஸ் கட்சியை பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு பேசுவதற்கு எதுவும் கிடையாது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விண்ணிலிருந்து பார்த்து கொண்டு இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஆத்மா மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.