மதுரை
அரசியலமைப்பு சட்டத்தை தமிழக கவர்னர் கேள்விக்குறியாக்குகிறார்
|அரசியலமைப்பு சட்டத்தை தமிழக கவர்னர் கேள்விக்குறியாக்குகிறார் என தொல்.திருமாவளவன் பேசினார்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதன் நினைவுநாள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மணிப்பூரில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.தான் காரணம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கேள்விக்குறியாக்குகின்றார் கவர்னர் ஆர்.என். ரவி. அரசாங்கம் மதம் சார்ந்து இருக்க கூடாது. பா.ஜ.க. இதற்கு நேர் எதிர்கோட்டுக்கு உள்ளது. எனக்கென்று திருமண ஆசை இருக்கா? ஆனால் முடிவெடுத்துதான் இயக்கத்தில் உள்ளேன்.
மதுரை மேலப்பட்டியில் வி.சி.க. கொடி அகற்றப்பட்டது. தரையில் கட்டப்பட்ட கொடியை அகற்றினீர்கள். ஒருநாள் கோட்டையில் வி.சி.க. கொடி பறக்கும். வி.சி.க. ஆளட்டும் என தமிழக மக்களே சொல்லும் காலம் விரைவில் வரும். வி.சி.க.வை விமர்சிப்பவர்கள் பா.ஜ.க. கைக்கூலிகளாக உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வி.சி.க. போட்டியிட தயாராக உள்ளது. தென்னிந்திய அளவில் வி.சி.க. வலுப்பெறும். சனாதனத்தை வேறருக்கும் சக்தியா இருக்கும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாய், தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கிவீரணன், மணவாளன், ஆனந்த், ராஜாமணி, முத்துலட்சுமி, மணி, தனசேகரன், அடைக்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.