சென்னை
கணவர் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
|கணவர் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 37). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்த செல்வி (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கணவரை பிரிந்து அகரம்தென் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் செல்வி தனது குடும்பத்தினருடன் கணவர் மணிவண்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது மணிவண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மணிவண்ணனிடம், 2-வது திருமணம் குறித்து கேட்டார்.
அப்போது மணிவண்ணன் செல்வியை அடித்து துரத்தி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வி தனது கணவர் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் எதிரே மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் அமர்ந்து தனது 8 வயது மகன் மற்றும் சகோதரியுடன் செல்வி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசார் செல்வி மீது தண்ணீரை ஊற்றி கையில் இருந்த தீப்பெட்டியையும் வாங்கினர். தற்கொலைக்கு முயன்ற செல்வியை மீட்ட போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.