< Back
மாநில செய்திகள்
ராகுல் காந்தி அணிந்த டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது - கே.எஸ்.அழகிரி விளக்கம்...!
மாநில செய்திகள்

ராகுல் காந்தி அணிந்த டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது - கே.எஸ்.அழகிரி விளக்கம்...!

தினத்தந்தி
|
10 Sept 2022 5:52 PM IST

திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி 4-வது நாளாக இன்று ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார். அவர் அணிந்திருக்கும் டீ-சர்ட் 40 ஆயிரம் ரூபாய் என பாஜக தரப்பில் இருந்து சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டீ-ஷர்ட்டின் விலை ரூ.41,257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை மற்றும் கண்ணாடியின் விலை குறித்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல் காந்தியின் டீ- சர்ட் குறித்த தகவல்களைதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

ராகுலின் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் நினைத்து பார்த்ததைவிட லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் குவிந்தனர். அவரது கருத்துகளும், எளிமையும் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இந்தப் பயணத்தைத் தொடங்கவில்லை. இந்திய மக்களின் ஒற்றுமைக்காகத் தான் நடக்கிறார்.

திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். நடைபயணத்திற்காக 20 ஆயிரம் டீ - சர்ட்களை அடித்தோம். இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டீ- சர்ட்டில் தலைவர்களின் படங்கள் போடப்பட்டுள்ளது.

ராகுலுக்காக 4 டீ-சர்ட்கள் படங்கள் இல்லாமல் அடிக்கப்பட்டன. அது 40 ஆயிரமும் இல்லை. 4 லட்சமும் இல்லை. மோடிதான் ரூ.10 லட்சத்தில் கோட் அணிந்து உள்ளார். ராகுலைச் சந்தித்தவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்