மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருபதாவது:-
தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக அரசு, இப்போது அதை மீறுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதிக இணைப்புகள் இருந்தால் அவற்றில் ஓர் இணைப்பு 1டி கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.
ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் நுகர்வோருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறு இணைக்கப்படும் போது ஒரு வீட்டைத் தவிர, குறிப்பிட்ட வளாகத்தில் உள்ள மற்ற அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். அதுமட்டுமின்றி, ஏதேனும் ஓர் இணைப்பு 1டி கட்டணப் பிரிவுக்கு மாற்றப்பட்டால், அந்த இணைப்புக்கு யூனிட்டுக்கு ரூ.8.15 கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன், நிலையான கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூ.204 வசூலிக்கப்படும். இது வழக்கமான மின் கட்டணத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதை தவிர்க்க முடியாது. சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அத்தகைய வீடுகள் அனைத்தும் ஒருவருக்கு சொந்தமானது என்பதால் அனைத்து வீடுகளுக்குமான மின் இணைப்புகளும் ஒருவர் பெயரில் தான் இருக்கும். சில இடங்களில் வீடுகளின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான வீடுகளை தங்களின் வாரிசுகளுக்கு பிரித்து வழங்கினாலும் கூட பலரும் மின் இணைப்பின் பெயரை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஆனாலும், அந்த வீடுகளில் குடி இருப்பதும், மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் தான். அவ்வாறு இருக்க அனைத்து வீடுகளுக்கான மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கமாக செலுத்த வேண்டிய ரூ.1,125 கட்டணத்திற்கு பதிலாக ரூ.3,464 கட்டணம் செலுத்த வேண்டும். இது 3 மடங்குக்கும் கூடுதலான தொகை. இது நுகர்வோரை சுரண்டும் செயல் என்பதில் ஐயமில்லை.
2022-ம் ஆண்டில் நிறைவில் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. ஒவ்வொருவரின் பெயரிலும் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து அவை அனைத்தையும் இணைப்பதற்காகவும், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தவும் தான் அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி விளக்கமளித்த அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் இணைப்புகள் இணைக்கப்படாது. இது தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளை மின்சார நுகர்வோர்கள் நம்ப வேண்டாம்"என்று விளக்கம் அளித்திருந்தார்.
அதேபோல், ஒரு வளாகத்துக்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என திருவெறும்பூர் தமிழ்நாடு மின்சார வாரியம் பயனாளி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்புகள் தொடர்பாக விளக்கமளித்த மின்வாரியம், "கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் இணைக்கவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டு வருகிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று பொதுமக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
ஆனால், அதன்பின் ஓராண்டு மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளில் மின்சார வாரியம் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது தமிழக மக்களுக்கு செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம். அதிலும், குறிப்பாக தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு பேசிய தமிழக அரசும், மின்சார வாரியமும், தேர்தலுக்குப் பிறகு தங்களின் கோரமான உண்மை முகத்தை காட்டுவதை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏற்கனவே, சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டிய தமிழக அரசு, இப்போது மின்னினைப்புகளை இணைக்கத் துடிப்பது பெரும் பாவம்.
எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, இப்போதுள்ள முறையே தொடர அனுமதிப்பதுடன், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.