< Back
மாநில செய்திகள்
தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது
சேலம்
மாநில செய்திகள்

தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது

தினத்தந்தி
|
17 Oct 2022 1:30 AM IST

தேவூர்:-

காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 1.000 ஏக்கர் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

50 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.95 லட்சம் கனஅடி நீர் வருகிறது. அதே அளவில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டாரத்தில் காவிரி கரையோர பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குறிப்பாக கரையோரத்தில் தாழ்வான பகுதியான காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான் திட்டு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. மதிக்கிழான் திட்டு பகுதியில் இருந்து மணக்காடு செல்லும் வழியில் தார் சாலை தண்ணீரில் முழுவதும் மூழ்கியது.

பாலம் மூழ்கியது

காவேரிப்பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராகு கேது கோவில், கம்பத்தையன் கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தது. தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் சரபங்கா நதி, காவிரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ள பிரதான பாலம் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியது. இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக எடப்பாடியில் இருந்து வட்ராம்பாளையம் மற்றும் கல்வடங்கம், காவேரிப்பட்டி வழியாக குமாரபாளையத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் அண்ணமார் கோவில் பாலம் வழியாக செல்லும்.

பொதுமக்கள் சிரமம்

திடீர் வெள்ளப்பெருக்கால் பாலம் தண்ணீரில் மூழ்கியதால், இந்த பாலத்தின் வழியாக குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, தேவூர் அருகே உள்ள கல்வடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்பு கரட்டூர், ைககோளபாளையம், சோழ கவுண்டனூர், சென்றாயனூர், வட்ராம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மேலும் கோனேரிபட்டி, காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகள் வெள்ளப்பெருக்கால் மூழ்கி உள்ளன. இதில் அங்குள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால், அரசிராமணி, தேவூர், சங்ககிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

1,000 ஏக்கர் விவசாய நிலங்கள்

மேலும் தேவூர் அருகே கோம்புக்காடு, கொட்டாயூர், ஆத்துக்காடு, கல்வடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், அண்ணமார் கோவில், ராணா தோட்டம், புள்ளாக்கவுண்டம்பட்டி, ராமக்கூடல், வேலாத்தா கோவில், புளியம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தண்ணீர் மூழ்கடித்தது.

இதில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டைக்காய், சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் விவசாய கிணறுகளும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோரங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.

விடிய, விடிய கண்காணிப்பு

இதனிடையே காவேரிப்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பண்ணன், பிரதீப் குமார், செந்தில் குமார் மற்றும் ஊழியர்கள் இரவு முழுவதும் விடிய, விடிய காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக காவேரிபட்டி பகுதியில் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைத்து உணவு, உடைகள் வழங்கினர். மேலும் வீட்டில் வைத்திருந்த நெல், அரிசி, பருப்பு, உடைமைகள் மற்றும் கால்நடைகளான ஆடு, மாடு, கோழிகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு ெசன்றனர்.

மேலும் செய்திகள்