தஞ்சாவூர்
எலுமிச்சை பழம் வரத்து 1 டன்னாக குறைந்தது
|எலுமிச்சை பழம் வரத்து 1 டன்னாக குறைந்தது
தஞ்சையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 5 டன் வந்த இடத்தில் தற்போது 1 டன் பழங்கள் தான் விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம் மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து விருப்பத்துக்கு ஏற்க சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து பருகுவது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. எலுமிச்சை பழசாறில் சிட்ரிக் அமிலம் உள்ளது.
எலுமிச்சை வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நறுமண எண்ணெய் தயாரிப்பு, சோப்பு தயாரிக்க பயன்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் எனவும் கூறப்படுகிறது. உணவுப்பொருளாகவும் பயன்படுத்தப்படும். இந்த எலுமிச்சை பழ சாறை வெயில் காலத்தில் அதிக அளவில் பருகுவது உண்டு.
கோடை வெயில்
தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் இப்போதே மக்கள் குளிர்பானங்கள், கூழ், நுங்கு, இளநீர் போன்ற கடைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். எலுமிச்சை பழங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி விட்டதால் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தஞ்சை காமராஜர் காய்கனி மார்க்கெட்டுக்கு தினமும் 5 டன் வீதம் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வரும். தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலும் இருந்து பழங்கள் விற்பனைக்கு வரும். தற்போது தட்டுப்பாடு காரணமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. அதுவும் குறைந்த அளவே தான் விற்பனைக்கு வருகிறது.
விலை அதிகரிப்பு
இதனால் எலுமிச்சை பழங்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தஞ்சை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்னும் நாட்கள் செல்ல, செல்ல பழங்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது கோடை வெயில் தொடக்கத்திலேயே பழங்கள் விலை அதிகரிக்க தொடங்கி விட்டதால், ஏப்ரல், மே மாதங்களில் எலுமிச்சை பழங்களின் விலை இன்னும் அதிக அளவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை
இது குறித்து எலுமிச்சை பழ மொத்த வியாபாரி ராஜா கூறுகையில், கோடை வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலும் பழங்கள் வரத்தும் குறைவாகத்தான் உள்ளது. தஞ்சை மார்க்கெட்டுக்கு 5 டன் வந்த நிலையில் தற்போது 1 டன் தான் விற்பனைக்கு வருகிறது. இதனால் பழங்களின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.