< Back
மாநில செய்திகள்
தொழிலாளியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக பணியிட மாற்றம்....!
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தொழிலாளியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக பணியிட மாற்றம்....!

தினத்தந்தி
|
10 Jun 2023 12:01 PM IST

நிலத்தகராறில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வந்த தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

எட்டயபுரம்,

விளாத்திகுளம் அருகே நிலத்தகராறில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வந்த தொழிலாளியை தாக்கியதாக புகார் எழுந்ததால், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

நிலத்தகராறு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடியைச் சேர்ந்தவர் அழகு முருகன். எம்.சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்தது.

இதுகுறித்து ஜெகநாதன் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் விசாரணை நடத்தினார்.

தாக்கியதாக புகார்

அப்போது விசாரணைக்காக வந்திருந்த அழகு முருகனின் சகோதரரான கூலி தொழிலாளி ராஜகனிக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ராஜகனியை சப்-இன்ஸ்பெக்டர் தள்ளிவிட்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது.தாக்குதலில் காயமடைந்த ராஜகனி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இதுதொடர்பாக விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரத்தை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், ''சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடந்ததாக எழுந்த புகாரின்பேரில், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்' என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்