திருவள்ளூர்
மாண்டஸ் புயலால் பாதிப்புக்குள்ளாகி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சப்-கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
|மாண்டஸ் புயலால் பாதிப்புக்குள்ளாகி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முகாம்களில் தங்க வைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்தது வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 35 பேர் அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சப்-கலெக்டர் ஆய்வு
அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் உணவுகளை பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் ஏற்பாடு செய்து வருகிறார். நேற்று திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, பிஞ்சிவாக்கத்தில் உள்ள முகாமில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருந்த மக்களுக்கு அவர் ஆறுதல் கூறி பாய், தலையணை, போர்வை, பிஸ்கட் போன்றவற்றை வழங்கினார். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.