< Back
மாநில செய்திகள்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் சுவர் ஏறி குதித்து நியாயம் கேட்கச் சென்ற மாணவிகள்
மாநில செய்திகள்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் சுவர் ஏறி குதித்து நியாயம் கேட்கச் சென்ற மாணவிகள்

தினத்தந்தி
|
16 Sept 2023 12:12 AM IST

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் மாணவிகள் சுவர் ஏறி குதித்து நியாயம் கேட்க சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்வோம் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை வணிகவியல் படிப்பில் சேர்ந்த மாணவிகளுக்கு, 3 ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ் தருவோம் என்றும், 5 ஆண்டு முழுமையாக முடித்தால் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்குவோம் என்றும் கல்வி நிறுவனம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.அதனை பின்பற்றி 3 ஆண்டுகள் முடித்ததும் மாணவிகள் இளங்கலை சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் கேட்டதாகவும், ஆனால் பல்கலைக்கழகம் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் கடந்த 12,13-ந்தேதிகளில் போராட்டத்தை நடத்தினார்கள்.

காலவரையற்ற விடுமுறை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் 16-ந்தேதி (நேற்று) நல்ல முடிவை தெரிவிப்பதாக போலீசார் மூலம் கூறியிருந்தனர். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக மாணவிகள் கைவிட்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழகம் தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், '3 ஆண்டுகள் முடித்த மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை அவர்கள் கேட்டிருந்தனர். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மாணவிகள் அதனை ஏற்காமல் வகுப்புகளை புறக்கணிப்பு செய்வதால், மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை சென்னை மையத்துக்கு வழங்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் பா.ஷீலா தெரிவித்திருந்தார்.

பரபரப்பு

ஏற்கனவே 16-ந்தேதி முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்ததை நம்பி வந்த மாணவிகள், பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதையும், கல்வி நிறுவனத்தின் நுழைவுவாயில் பகுதி பூட்டப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவிகளில் சிலர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நியாயத்தை கேட்பதற்காக சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

அதற்குள் போலீசார் அங்கு வந்து, மாணவிகளை திரும்பிச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தால் கைது செய்து, வழக்குப்பதிவு செய்வோம் என போலீசார் மிரட்டியதாக மாணவிகள் தெரிவித்தனர். எதற்காக கைது செய்வீர்கள்? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? என போலீசாரிடம் மாணவிகள் கேட்டதால், போலீசாருக்கும், மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சில மாணவிகள் கதறி அழுதனர். அதில் ஹேமலதா என்ற மாணவி மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் வராததால், மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பல்கலைக்கழகம் தங்களை ஏமாற்றுவதாகவும், அவர்கள் சுற்றறிக்கையில் கூறியிருப்பதில் நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் தெரிவித்த மாணவிகள் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என கூறினர்.

மேலும் செய்திகள்