திருவள்ளூர்
காலதாமதமாக இயக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
|கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சை காலதாமதமாக இயக்கியதால் அதனை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கரடிபுத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் பலர் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும், கண்ணன்கோட்டையில் இருந்து கரடிபுத்தூர் வழியாக ஊத்துக்கோட்டை வரை இயக்கப்படும் அரசு பஸ்சில் தினமும் பயணம் செய்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த பஸ் முறையாக இயக்கப்படுவது இல்லை எனவும், தொடர்ந்து பல நாட்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை கரடிபுத்தூரில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் சிலர் காலதாமதமாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு நேரில் வந்த ஊத்துக்கோட்டை போக்குவரத்து துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நேரத்தில் பஸ் இயக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அந்த பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.