கள்ளக்குறிச்சி
தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல்
|மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை 10-ந் தேதி நடைபெறும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி
பள்ளி மாணவி சாவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஜாமீன் வழங்க எதிர்ப்பு
அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் காசிவிஸ்வநாதன் மூலமாக மனுதாக்கல் செய்தார். இம்மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
ஜாமீன் மனு மீதான இருதரப்பு வாதங்கள் மற்றும் மாணவி தாயார் தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, இம்மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மாணவியின் தாயார் தரப்பு வக்கீலான காசி விஸ்வநாதன் கூறுகையில், மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்னும் முழுமைபெறவில்லை. ஆரம்ப நிலையிலேயேதான் உள்ளது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அனுப்பப்படவில்லை. மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீசில் புகார் செய்துள்ளோம். இந்த சம்பவத்தில் இதுவரை உண்மை வெளியே வரவில்லை. உண்மை தெரியும் வரை அவர்கள் 5 பேரையும் ஜாமீனில் வெளியே விடக்கூடாது என்றார். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நிருபர்களிடம் கூறுகையில், எனது மகளின் மரணத்திற்கு தக்க நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.