வனத்துறையினர் அலட்சியத்தால் பரிதாபமாய் போன மாணவர் உயிர்
|திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கண்காணிப்பு கேமரா கோபுரம் விழுந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கண்ணிகைபேர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீதஞ்சேரி காப்புக்காடு வனப்பகுதி சாலையில் பேருந்துக்காக தினேஷ் குமார் காத்திருந்தார்.
அப்போது, அப்பகுதியில் வனத்துறையினரால் பராமரிப்பின்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உயர் கோபுரம் எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர் தினேஷ் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வனத்துறை உரிய பராமரிப்பின்றி மெத்தன போக்குடன் செயல்பட்டதே கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டி அப்பகுதி கிராம மக்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக செங்குன்றம் வனத்துறை மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.