< Back
மாநில செய்திகள்
தமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

தமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட சவளக்காரன் மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மன்னார்குடி:

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றிக்கு வித்திட்ட சவளக்காரன் மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சவளக்காரன் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மாணவிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.

விளையாட்டுகளை பற்றி அதிகம் அறியாத கிராமத்து மாணவிகளுக்கு இந்த பள்ளியின் பகுதி நேர விளையாட்டு ஆசிரியர் முத்துக்குமார், கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி பயிற்சி அளித்து வருகிறார். இதன் பயனாக இந்த பள்ளி மாணவிகள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

தமிழக அணி வெற்றிக்கு...

கடந்த ஆண்டு கோவாவில் நடந்த தேசிய அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அதில் சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் கலந்து கொண்டு தமிழ்நாடு அணி வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தனர்.

இதேபோல் இந்த ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த அணியில் சவளக்காரன் பள்ளியில் படித்த மாணவி பிரியதர்ஷினி (தற்போது கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்) கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப்போட்டியில் அரியானா அணிக்கு எதிராக பிரியதர்ஷினி ஒரு கோல் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மாணவிக்கு உற்சாக வரவேற்பு

நேற்று காலை ஊர் திரும்பிய மாணவி பிரியதர்ஷினியை பொதுமக்கள் மற்றும் மாணவி படித்த சவளக்காரன் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து அவர் படித்த பள்ளிக்கு அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், மன்னார்குடி கால்பந்தாட்ட கழக தலைவர் அசோகன், தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாப்பையன், உடற்பயிற்சி ஆசிரியர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பிரியதர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்

பின்னர் மாணவி பிரியதா்ஷினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் விளையாட்டாகவும், அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாகவும் கால்பந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. உலகப்கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு கட்டமைப்புகளை கொடுத்து சிறுவயதில் இருந்து சிறந்த முறையில் பயிற்சியளித்தால் இந்திய கால்பந்து அணி உலகப்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் கனவு நிறைவேறும் என்பது நிச்சயம்.

விளையாட்டு மைதானம் வேண்டும்

சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. இங்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால் என்னைப்போன்று வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த பள்ளியில் நிரந்தர விளையாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். நான் பெற்றோருடன் அரசு புறப்போக்கு இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு அரசு வீட்டுமனை வழங்கினால் உதவிகரமாக இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்