நாமக்கல்
ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.20 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்
|ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.20 ஆயிரத்தை போலீசாரிடம் மாணவர் ஒப்படைத்தார்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அரசு (வயது 17). இவர் பரமத்தியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உள்ள ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றனர். அப்போது வங்கி ஏ.டி.எம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்துள்ளனர். கேட்பாரற்று கிடந்த அந்த பணத்தை எடுத்து பார்த்த போது அதில் ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது. பின்னர் அந்த பணத்தை வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் ஒப்படைத்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர் பணம் வர தாமதமானதால் பணம் வரவில்லை என நினைத்து ஏ.டி.எம். கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டதும், அதன்பிறகு அங்கு பணம் எடுப்பதற்காக வந்த மாணவர் ஏ.டி.எம்-ல் விட்டு சென்ற பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏ.டி.எம்.ல் விட்டு சென்ற ரூ.20 ஆயிரத்தை ஒப்படைத்த பள்ளி மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் இந்திராணி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து ஏ.டி.எம்-ல் விட்டு செல்லப்பட்ட ரூ.20 ஆயிரம் யாருடையது என்பது குறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.