< Back
மாநில செய்திகள்
கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 7:45 PM GMT

சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியேறும் போராட்டம்

சாணார்பட்டி அருகேயுள்ள செங்குறிச்சி ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊருக்குள் செல்ல தார்சாலை வசதி, முடிமலை ஆற்றின் கரையோர தடுப்புசுவர், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் சாணார்பட்டி பஸ்நிறுத்தத்தில் இருந்து கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்கள் கன்றுகுட்டி, விறகு, குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போராட்டத்திற்கு தலைமை ஏற்று வந்தவர் உள்பட சிலரை மட்டும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். அவர்களுடன் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். புளியம்பட்டி கிராமத்தில் விரைவில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்