< Back
மாநில செய்திகள்
அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய ஓடை தூர்வாரப்பட்டது; நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோடு
மாநில செய்திகள்

அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய ஓடை தூர்வாரப்பட்டது; நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
2 Oct 2023 2:46 AM IST

அட்டவணை அனுமன்பள்ளியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நீரோடையை தூர்வாரியதன் மூலம் நீண்டகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

அறச்சலூர்

அட்டவணை அனுமன்பள்ளியில் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நீரோடையை தூர்வாரியதன் மூலம் நீண்டகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

ஓடை தூர்வாரப்பட்டது

ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்து உள்ளது அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி. இங்குள்ள வெள்ளிவலசு பகுதியில் ஓடை ஒன்று உற்பத்தியாகிறது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர், ஊஞ்சப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், கசிவு நீர் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளிவலசு பகுதியில் இருந்து ஓடையாக புறப்படுகிறது. இந்த ஓடை வேமாண்டம்பாளையம், பள்ளத்துக்கடை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஓடி சென்னிமலை ரோடு பழையபாளையம் பகுதியில் உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் கலக்கிறது.

இந்த ஓடை நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனை தூர்வார வேண்டும் என்று அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி தலைவர் கே.தனபாக்கியம், முன்னாள் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணியின் மாநில பொதுச்செயலாளருமான வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் ஓடை தூர்வாரப்பட்டது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கே.தனபாக்கியம் கூறியதாவது:-

எங்கள் ஊராட்சியின் பெரும்பகுதி ஊர்களை கடந்து இந்த ஓடை செல்கிறது. மழைக்காலம் வந்து விட்டால் காட்டாறு போல பெருகி வரும் வெள்ளம் கரையோர வீடுகளுக்குள் புகுந்து விடும். சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்படும். அதை சரி செய்யவே போதும் போதும் என்றாகிவிடும். இந்த முறை தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரின் வழியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஓடையை தூர்வார வேளாண்மை பொறியியல் துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த துறை அதிகாரிகள் ராட்சத கிரேன்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுமார் 100 மணி நேரம் பணி செய்து ஓடையை தூர்வாரி கரைகளை பலப்படுத்திக்கொடுத்து உள்ளனர். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சி

இதுகுறித்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் மல்லிகாபழனிச்சாமி, ஊர் பெரியவர் நாச்சிமுத்து ஆகியோர் கூறும்போது, 'எங்கள் பகுதிக்கு இது மிகப்பெரிய பணியாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளப்படாத கோரிக்கையை தற்போதைய தலைவர் நிறைவேற்றி தந்திருக்கிறார். இது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.' என்றார்கள்.

மேலும் செய்திகள்