வேலூர்
தமிழக அரசின் நிலைப்பாடு தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு
|மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும் என்று வேலூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாலையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கவர்னரின் செயல்பாடுகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதைவிட நாகரீகமாக அதே நேரத்தில் அழுத்தமாக கடுமையாக ஒரு கடிதத்தை எழுத முடியாது.
அந்த அளவிற்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். அந்த கடிதத்தில் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மத்திய, மாநில அரசுகளின் உறவு எவ்வாறு இருக்க வேண்டும்.
மேம்பட்ட ஜனநாயகத்தில் கவர்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கி எழுதி உள்ளார். மாறாக கவர்னர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை குறிப்பிட்டுள்ளார். இதற்குமேல் ஒரு மாநில அரசு தனது கருத்தை சொல்ல இயலாது.
கவர்னரை திரும்ப பெற வேண்டும்
தமிழக கவர்னர் சட்டம், மரபுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பட்ட அதிகாரங்கள் எதுவும் கிடையாது. இது கவர்னருக்கு புரியவில்லை. சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவும் செய்ய முடியாத தனக்கென்று ஒரு பிரத்யேக வரம்பு இல்லாமல் செயல்படுகிற ஒரு கவர்னர் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து கீழே விழுவது பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இதுவரை அவர் 3 நடவடிக்கைகள் எடுத்தார். அவற்றில் பின்வாங்கியுள்ளார். அல்லது செயல்பட முடியாமல் போனார். இது கவர்னர் மாளிகைக்கு அழகு அல்ல.
இதை தான் முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்தி உள்ளார். ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து. தமிழக முதல்-அமைச்சரும் அதைத்தான் மையமாக சொல்லி இருக்கிறார். கவர்னரை திரும்ப பெறவில்லை என்றால் அவர் எதிலும் பங்கெடுக்க முடியாத ஒரு அரசாக இது போய்விடும். இது கவர்னர் பதவிக்கு அழகல்ல. அவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுவார் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
இந்தியாவின் நட்சத்திரம்
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தான் மத்திய அரசால் மு.க.ஸ்டாலின் குறிவைக்கப்படுகிறார். ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதற்காகவும், மதசார்பற்ற கூட்டணிகள் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவும், சிறிய பிரச்சினைகளை மறந்து நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் என்று அவர் கூறிவருகிறார். இன்றைக்கு இந்தியாவின் நட்சத்திரமாக திகழக் கூடியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு அவரை குறி வைக்கிறார்கள். அவருக்கு சிரமத்தை கொடுக்கிறார்கள். இதனுடைய விளைவு என்னவாகும் என்று சொன்னால் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய கதாநாயகனாக மாறுவார். இவர்கள் சிரமம் கொடுக்க கொடுக்க அவரின் ஆட்சி வலுவடையும். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெறக்கூடிய சூழல் வரும். இதனை கவர்னரும், பா.ஜனதா கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் நிலைப்பாடு
மாநில கட்சிகளை அழிக்க பா.ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது. சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டேவை முதல்-அமைச்சராக மாற்றினார்கள். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2-ஆக உடைத்து அஜித்பவாருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எண்ணிக்கை போட்டியில் வேண்டுமானால் அஜித்பவாரும், ஷிண்டேவும் வெற்றி பெறலாம். மக்களிடம் வாக்கு என்று செல்லும்போது சரத்பவாரும், உத்தவ்தாக்கரேவும் வெற்றி பெறுவார்கள்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தான் தமிழக காங்கிரசின் நிலைப்பாடாகும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே கர்நாடக அரசை கண்டித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்ய தேவையில்லை.
அதிக தொகுதிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் செய்திருந்தால் அவர் மீது விசாரணை நடத்தலாம். ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர் குற்றவாளி இல்லை. தற்போதைய மத்திய மந்திரிகளில் 33 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். அதனை நிரூபிக்கவில்லை. தமிழகத்தில் தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கையை வரவேற்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அதிக தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டு பெறுவோம். அவற்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.