தஞ்சாவூர்
மதுப்பாட்டிலுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிய ஊழியர்கள்
|லியோ படத்தை பாா்க்க தியேட்டருக்கு, மதுப்பாட்டிலுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிய ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:
லியோ படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று வெளியாகி உள்ளது. ஒரு சில மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதிக்கபட்டிருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.
இதற்காக அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வரத்தொடங்கினர். அதன் படி கும்பகோணத்தில் உள்ள தியேட்டர்களில் நேற்று லியோ படம் திரையிடப்பட்டது. காலை 9 மணி காட்சிக்கு அதிகாலை முதலே ரசிகர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் தியேட்டர் அமைந்திருக்கும் சாலையின் தொடக்கத்தில் இருந்தே மேளம், தாளம் முழுங்க ஊர்வலமாக வந்தனர்.
போதை பொருட்கள்
சிலர் தியேட்டர் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும், மாலை அணிவித்தும் கொண்டாடினர். சிலர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தியேட்டர்களுக்குள் போதை பொருட்கள் கொண்டு செல்ல கூடாது என்பதால், ரசிகர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்..
அப்போது சிலர் தியேட்டருக்கு, மதுபாட்டில்களை மறைத்து வைத்து கொண்டு சென்றனர். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்த ஊழியர்கள் போலீசார் உதவியுடன், மதுப்பாட்டில்கள் வைத்திருந்தவர்களை வெளியே அழைத்து சென்றனர். இதனால் ரசிகர்ளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக திரையரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.