< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
மாநில செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

தினத்தந்தி
|
29 Sept 2022 10:47 AM IST

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படை விரட்டியடித்து உள்ளது.

ராமேசுவரம்,

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கச்சத்தீவு பிரச்சினையில் தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் சுமார் 1,500 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருப்பதாக கூறி அங்கிருந்து திரும்பி செல்லுமாறு ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் அவர்களது படகில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பி வந்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்