< Back
மாநில செய்திகள்
மஞ்சுவிரட்டு  முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
5 March 2023 12:15 AM IST

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிங்கம்புணரி,

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாசி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் திருக்கைலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை ஐந்து வகை கோவிலில் ஒன்றான சதுர்வேத மங்கலம் ஆத்மனாகிய அம்பாள் உடனுறை ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மாசிமகா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 1-ந் தேதி திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி, 2-ந் ேததி சமணர்களுக்கு சாப விமோசனம் ஏற்படுத்தும் கள்வன் திருவிழா நடைபெற்றது.

தேரோட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் திருத்தேர் வடம் பிடித்து தேர் நான்கு ரத வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவ விழா நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. முக்கிய நிகழ்வாக 10-ம் நாளில் உலக புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெற உள்ளது.

அதன்படி நாளை(திங்கட்கிழமை) நடைபெற இருக்கும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு கேலரி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் மஞ்சுவிரட்டு நடைபெறும் இடங்களையும், முன்னேற்பாடு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ ஏற்பாடுகள், பொதுமக்கள் மஞ்சுவிரட்டு விழாவை காணுவதற்கு பாதுகாப்பான இடங்கள் போன்றவற்றை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை மஞ்சுவிரட்டு விழா குழுவினர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள். இந்த ஆய்வின்போது எஸ்.வி.மங்கலம் இன்ஸ்பெக்டர் விஜயன், மருதிபட்டி ஊராட்சி தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்