< Back
மாநில செய்திகள்
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:15 AM IST

காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர்.

காரைக்குடி

காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர்.

தைப்பூச திருவிழா

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் புகழ்பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு 8 மணிக்கு சண்முகநாதபெருமான், வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் திருநாள் அன்று இரவு தங்கரதத்திலும், 8-ம் திருநாள் அன்று வெள்ளி ரதத்திலும் சண்முகநாதபெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 9-ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று 10-ம் நாள் தைப்பூச திருவிழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் சண்முகநாதபெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன், ஒரு சிறிய சப்பரத்திலும், மற்றொரு சப்பரத்தில் விநாயகர் ஸ்கந்தர் மற்றும் முருகனும் எழுந்தருளினர்.

மஞ்சுவிரட்டு

அதன் பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி அருகே உள்ள சின்னக்குன்றக்குடி தேனாற்றில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சின்னகுன்றக்குடி பொட்டலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க் கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு தொழுவத்தில் 100 காளைகள் பங்கேற்று தொழு மஞ்சுவிரட்டாக நடைபெற்றது. முன்னதாக காளைகளை கால்நடை டாக்டர் பரிசோதனை செய்து அதில் தகுதியில்லாத 20 காளைகள் வெளியேற்றப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள் சில காளைகளை அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிச் சென்றது. இதில் காளைகள் முட்டியதில் 40 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த அரசு ஆரம்ப சுகாதாரத்துறை டாக்டர்கள் சிகிச்சையளித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டனர். மஞ்சுவிரட்டை முன்னிட்டு குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்