சிவகங்கை
மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 10 பேர் காயம்
|கல்லல் அருகே அந்தரநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
காரைக்குடி,
கல்லல் அருகே அந்தரநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் அந்தரநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைமாத செவ்வாய்க்கிழமையையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மஞ்சுவிரட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் கிராமத்தில் இருந்து ஆண்கள் மட்டும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் வயல்வெளிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் அவர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களையும், பார்வையாளர்களையும் மிரள வைத்து அங்கிருந்து சீறிப்பாய்ந்து சென்றது.
இவ்வாறு இந்த கட்டுமாடு மஞ்சுவிரட்டு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு தேவபட்டு கிராமத்தில் இருந்து கிராம மக்கள் அதிர்வேட்டுகள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் தாம்பூலத்தில் பூ மாலைகள் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அந்தரநாச்சியம்மனுக்கு பூ மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் இருந்து அவிழ்த்துவிடுவதற்காக தயாராக இருந்த காளைக ளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொழுவத்தில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டது. இதை அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. மஞ்சுவிரட்டையொட்டி காளைகள் முட்டி 10 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை மற்றும் வருவாய்த்துறையினர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பார்வையாளர்கள் திரண்டதால் கல்லல்-காரைக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.