சிவகங்கை
காளையார்கோவில் அருகே கண்டுபட்டியில் 1000 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு-போலீஸ்காரர்கள் உள்பட 108 பேர் படுகாயம்
|காளையார்கோவில் அருகே கண்டுபட்டியில் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்றன. இதில் போலீஸ்காரர்கள் உள்பட 108 பேர் படுகாயம் அடைந்தனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே கண்டுபட்டியில் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்றன. இதில் போலீஸ்காரர்கள் உள்பட 108 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டியில் பழைய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவாகும்.
நேற்று நடைபெற்ற இத்திருவிழாவில் அந்தோணியார் ஆலயம் முன்பு ஏராளமானோர் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்ததுடன் கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இந்த திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு அனைத்து வீடுகளிலும் விருந்து வழங்கப்பட்டது. தங்கள் இல்லங்கள் வழியாக செல்வோரை வாசலில் நின்று இருகரம் கூப்பி சாப்பிட வருமாறு அழைப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
108 பேர் படுகாயம்
விழாவையொட்டி கிராமத்தில் உள்ள திறந்தவெளி பொட்டலில் சுமார் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து ெதாடங்கி வைத்தனர்.
முதலில் கண்டுப்பட்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதை தொடர்ந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மைதானத்தில் காளைகள் துள்ளி குதித்து ஆக்ரோஷமாக சென்றன. அவ்வாறு சென்ற காளைகளை காளையர்கள் அடக்க முயன்றனர். அப்போது காளைகள் முட்டியதில் 108 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா, ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோரும் அடங்குவர். பலத்த காயமடைந்த 33 பேர் சிவகங்கை மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
திரண்ட பார்வையாளர்கள்
இந்த விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.