< Back
மாநில செய்திகள்
மு.சூரக்குடியில் ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

மு.சூரக்குடியில் ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

தினத்தந்தி
|
7 Jan 2023 12:15 AM IST

சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முதல் மஞ்சுவிரட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்துவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி கிராமத்தில் பிரமாண்டமான முறையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்த கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாடிவாசல் மைதானத்தின் முன்பு உள்ள தொழுவத்தில் பல ஊர்களில் இருந்து கோவில் காளைகளும் மற்றும் மஞ்சுவிரட்டு காளைகள், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி போன்ற ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டன. முன்னதாக மு.சூரக்குடி மந்தையிலிருந்து கிராமத்தினர், இளைஞர்கள் ஒன்றிணைந்து காளைகளுக்கு ஜவுளி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீறிப்பாய்ந்தன

பின்னர் கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. காலை 9.30 மணியளவில் கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மைதானத்தில் மஞ்சுவிரட்டு காளைகளுடன், காளையர்கள் விளையாடினார்கள்.

300-க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை பல ஊர்களில் இருந்து வந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையர்கள் அடக்க முயற்சித்தனர். அதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் போக்குகாட்டி சென்றன.

30 பேர் காயம்

ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு என்பதால் இந்த போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

போட்டியில் 27 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிங்கம்புணரி, மதுரை, சிவகங்கை போன்ற அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தலைமையில் மருத்துவ குழுவினர், காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.. ஏற்பாடுகளை மு.சூரக்குடி கிராம இளைஞர்கள், கிராமத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்