சென்னை
தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றியது அம்பலம்..!
|வளசரவாக்கத்தில் தந்தையை கொடூரமாக கொலை செய்து புதைத்த மகன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 78), ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் கடந்த 19-ந் தேதி திடீரென மாயமானார். சந்தேகத்தின் பேரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமரேசன் படுக்கையறை முழுவதும் ரத்த கறையாக துர்நாற்றம் வீசியபடி கிடந்தது.
இதையடுத்து குமரேசனின் மகள் காஞ்சனா மாலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் வயது முதிர்ந்த தந்தை குமரேசனை அவரது மகன் குணசேகரன் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்ததுள்ளார். பின்னர் அவரது உடலை டிரம்மில் போட்டு அடைத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள காலி இடத்தில் புதைத்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து உதவி கமிஷனர் கலியன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து குணசேகரனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த குணசேகரன் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது போலீசிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க குணசேகரன் மொட்டை அடித்து மாறு வேடத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த குணசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பின்னர் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.