செங்கல்பட்டு
தந்தையை அடித்துக்கொன்ற மகன்
|திருக்கழுக்குன்றத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கேசவன் (வயது 54). இவருக்கும் இவரது மகன் மணிகண்டன் (31) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மது போதையில் இருந்த மணிகண்டன் தந்தை கேசவனை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் கேசவன் மயக்கம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு கேசவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்து கொலை செய்த மணிகண்டனை கைது செய்தனர்.