விழுப்புரம்
சொத்தை பெற்றுக்கொண்டு மூதாட்டியை வீட்டை விட்டு துரத்திய மகன்
|சொத்தை பெற்றுக்கொண்டு மூதாட்டியை வீட்டை விட்டு துரத்திய மகன் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திண்டிவனம் தாலுகா கொரளூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரோஜா (வயது 65). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சின்னையனின் பெயரில் 3 ஏக்கர் 47 சென்ட் இடம் இருந்தது. எனது கணவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அந்த சொத்துக்களை நான் பராமரித்து பாதுகாத்து வந்தேன். எனக்கு வயதான காரணத்தினால் என்னுடைய மூத்த மகன் முருகன் என்பவர், சொத்துக்களை தான் பராமரித்துக் கொள்வதாகவும், என்னையும், எனது இளைய மகன் மாற்றுத்திறனாளியான தாமோதரனையும் கவனித்துக் கொள்வதாக கூறினார். இதனிடையே எனது கணவர் சின்னையனும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
பின்னர் எங்கள் சொத்துக்களை கடந்த 2020-ல் முருகன் தானசெட்டில்மெண்ட் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் என்னையும், எனது இளைய மகன் தாமோதரனையும் கவனித்து பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியதோடு எங்களை ஏமாற்றி சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார். இதுதொடர்பாக கடந்த 13.7.2022 அன்று மயிலம் சார்பதிவாளரிடம் மேற்கண்ட சொத்துக்கள் தொடர்பாக ஆவணப்பதிவு செய்யக்கூடாது என்று தடை மனு அளித்துள்ளேன். எனவே எங்களுக்கு பாத்தியப்பட்ட வாழ்வாதார சொத்தை ஆவணப்பதிவு செய்ய தடை விதிக்குமாறும், தானசெட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து எங்கள் சொத்தை மீட்டு எங்களிடம் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.