< Back
மாநில செய்திகள்
ரூ.5 கோடியில் தாய்க்கு தாஜ்மகால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்
திருவாரூர்
மாநில செய்திகள்

ரூ.5 கோடியில் தாய்க்கு 'தாஜ்மகால்' வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:15 AM IST

ரூ.5 கோடியில் தாய்க்கு ‘தாஜ்மகால்’ வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

திருவாரூர் அருகே தனது தாயின் நினைவாக ரூ.5 கோடியில் 'தாஜ்மகால்' வடிவில் நினைவு இல்லத்தை மகன் கட்டி உள்ளார்.

தாய்ப்பாசம்

இந்த உலகில் பிறந்்த ஒவ்வொரு உயிருக்கும் 'தாய்' உறவு என்பது அளவிட முடியாதது. தாயின் அன்புக்கும், பாசத்துக்கும் இந்த உலகில் விலை மதிப்பே கிடையாது. தனது குழந்தைகளுக்கு எத்தனை வயது ஆனாலும் ஒவ்வொரு தாய்க்கும் அவர்கள் குழந்தைகளே.

அப்படிப்பட்ட உறவான தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை சுயநலம் பிடித்த ஒருசிலர் பாரமாக கருதி முதியோர் இல்லங்களில் சேர்த்து தனது கடமை முடிந்து விட்டதாக கருதுவதையும் இந்த உலகில் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் தனது வாழ்க்கை, தனது மனைவி தனது பிள்ளைகள் என்ற சுயநலமே காரணம் ஆகும்.

நினைவு இல்லம்

சுயநலம் மிகுதியாகி போன இந்த சமூகத்தில் ஒருவர் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மகால் வடிவில் நினைவு இல்லம் கட்டி உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு நிகழ்வு திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் அரங்கேறி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாக கொண்டவர் அப்துல் காதர். இவருடைய மனைவி ஜெய்லானி பீவி. இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள். அம்ருதீன் ஷேக் தாவூத்(வயது 28) என்ற ஒரு மகன்.

தொழில் அதிபர்

அப்துல் காதர், சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். அம்ருதீன் ஷேக் தாவூத்திற்கு 11 வயது இருக்கும்போது அவருடைய தந்தை அப்துல்காதர் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன், மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்தார்.

இவர்களில் அம்ருதீன் ஷேக் தாவுது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தற்போது சென்னையில் தொழில் அதிபராக இருந்து வருகிறார். சிறுவயது முதல் தன்னை தனது தாயார் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது தாயாரின் வழிகாட்டுதலின்படியே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார்.

தாயை இழந்து தவிப்பு

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தனது தாயார் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தனது தாயின் நினைவலைகளால் தவித்து வந்தார்.

மண்ணுலகில் தன்னை விட்டு விட்டு விண்ணுலகத்துக்கு ்சென்ற தனது தாயாருக்கு தனது வாழ்நாளில் எதையாவது செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார்.

'தாஜ்மகால்'

அப்போது அவரது எண்ணத்தில் தனது தாயாருக்கு நினைவு இல்லம் ஒன்று கட்ட வேண்டும். அந்த நினைவு இல்லமானது பேசும்பொருளாக இருக்க வேண்டும் என்று தினசரி யோசித்து வந்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டபோது அவர் தாயின் நினைவு இல்லத்தை 'தாஜ்மகால்' வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்தார்.

ரூ.5 கோடி மதிப்பில்...

அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து தொழிலாளர்களும், வரவழைக்கப்பட்டு இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளில் 'தாஜ்மகால்' வடிவில் இந்த நினைவு இல்லத்தை அரும்பாடுபட்டு கட்டியுள்ளார்.

திருவாரூர் அருகே அம்மையப்பனில் கட்டப்பட்டுள்ள இந்த 'தாஜ்மகால்' வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த 2-ந் தேதி நடந்தது. ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவு இல்லம் பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடத்த...

இந்த நினைவு இல்லத்தை எந்த மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக்கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது 10 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசைதோறும் ஆயிரம் பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்.

===

அன்பின் சின்னமாக மாறிய 'தாஜ்மகால்'

தாயின் நினைவாக 'தாஜ்மகால்' கட்டிய அம்ருதீன் ஷேக் தாவூத்தின் செயல் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'தாஜ்மகால்' வடிவ நினைவு இல்லத்தை தினசரி ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள். தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் ஆக்ரா நதிக்கரையில் 'தாஜ்மகால்' கட்டினார். இது உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

'தாஜ்மகால்' என்ற பெயரை கேட்டாலே காதலின் சின்னம் என அனைவரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அருகே தாய் மீதான அன்பால் அவருடைய நினைவாக கட்டப்பட்ட இந்த 'தாஜ்மகால்' அன்பின் சின்னமாகவே மாறி விட்டது என பல்வேறு தரப்பினரும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

=====

மேலும் செய்திகள்