< Back
மாநில செய்திகள்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும்படி மென்பொருள் வடிவமைக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும்படி மென்பொருள் வடிவமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும்படி மென்பொருள் வடிவமைக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரை வழங்கினார்

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கி மற்றும் தானியங்கி எந்திரம் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கண்காணிப்பு கேமரா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் காவலாளிகளை நியமிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறைகளின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் சாலைகளில் போதுமான அளவில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு சரிவர இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் சிறிய அளவிலான சாதாரண கேமரா பொருத்த வேண்டும்.

ஏ.டி.எம். மையத்தின் கதவு, மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் ஆகியவற்றை உடைக்க முயன்றால் அபாய ஒலி அடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சென்சார் அலாரம் உடன் யூ.பி.எஸ்.கண்டிப்பாக பொறுத்தப்பட வேண்டும். மின் இணைப்பை துண்டித்தால் உடனடியாக அபாய ஒலி எழுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.

நன்னடத்தை சான்று

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும்படி மென்பொருள் வடிவமைக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப பணியமர்த்தப்படும் நபர்களை பற்றி காவல்துறையிடம் இருந்து நன்னடத்தை சான்று பெற்ற பின்னரே பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், இந்தியன் வங்கி பொது மேலாளர் சுதர்சன் மற்றும் வங்கி மேலாளர்கள் தானியங்கி எந்திர பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்