பெரம்பலூர்
பாம்பு கடித்து சிறுமி பலி
|பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்தாள்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, ஆலவாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டியில் ஒருவரது காட்டில் தங்கியிருந்து பண்ணை வேலை செய்து வருகிறார். அறிவழகனுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி (வயது 6). இவர் பள்ளியில் 1-ம் வகுப்பு முடித்து 2-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி மாலை மாட்டு கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தாள். அங்கு தென்னை மட்டையை எடுத்தபோது தனலட்சுமியின் வலது கையில் பாம்பு கடித்தது. இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தனலட்சுமியை மீட்டு இருசக்கர வாகனம் மூலம் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனலட்சுமியை சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தாள். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.