கோயம்புத்தூர்
சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும்
|கிணத்துக்கடவு பகுதியில் சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழி சாலை அமைக்கும் போது கிணத்துக்கடவு ஊருக்குள் 2.5 கிலோமீட்டர்தூரம் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதால் கிணத்துக்கடவில் இருக்கக்கூடிய அண்ணாநகர், செம்மொழிகதிர்நகர், கிரீன் கார்டன், மீனாட்சி கார்டன், பகவதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோதவாடி பிரிவு தாண்டி தனியார் பள்ளி அருகில் உள்ள யுடேன் பகுதிக்குச் சென்றுதான் திரும்பி கிணத்துக்கடவில் உள்ள வீட்டிற்க்கு வரக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது.
சாலை குறுகலாக உள்ளதால், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த சர்வீஸ் சாலை அமைந்த பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் செல்வதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலை பழுதடைந்து சாலையில் குழிகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் செல்வதற்கும், போக்குவரத்துக்கும் கடும் இடையூராக இருந்தது. இதனை தவிர்க்க கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதியில் செல்லும் சர்வீஸ் சாலையை 5.5 மீட்ட் இருக்கும் சாலையை அகலப்படுத்தி தரவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு வந்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் செந்தில் குமார், பேரூராட்சி நிர்வாகத்தினர், வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோருடன் சர்வீஸ் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை அருகிலுள்ள சர்வீஸ் சாலை வழியை இருவழி பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சர்வீஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடித்து டெண்டர் மூலம் சர்வீஸ் சாலையை விரைந்து அகலப்படுத்தி பொதுமக்கள் போக்குவரத்துக்கு விரிவுபடுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வேலைகளுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் டெண்டர் விடப்படும். அந்த டெண்டரின் போது இந்த சர்வீஸ் சாலைக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள)் சிக்கந்தர் பாட்சா, கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ட பலர் உடன் இருந்தனர்.