தமிழகத்தை உலுக்கிய செல்பி பயங்கரம்...இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்...!
|பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்,
பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கடந்த 3-ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த என்ஜினீயரான அஜித்பாண்டியன் (வயது 28) என்பவர் தவறி விழுந்தார். அப்போது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரை ேதடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் 5 நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் 6-வது நாளாக நேற்றும் என்ஜினீயரை தேடும் பணி நடந்தது. அப்போது ஓடையில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருந்தது. இருப்பினும் கயிறு கட்டி, ஓடையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்று கரையோரத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவர்கள் தேடினர். இருப்பினும் நேற்று மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று 7-வது நாளாக என்ஜினீயரை தேடும் பணி நடந்து வந்த நிலையில், தாண்டிகுடி அடுத்து புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரக்கூடிய வழியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைக்களுக்கு இடையில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் உடலை மேல கொண்டு வர தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.